Thursday, April 26, 2012

“தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்”


சென்ற ஞாயிற்றுக் கிழமை (22.04.12) “நுால் அறிமுகமும் வரலாற்றைப் பேசுதல்“ என்னும் நிகழ்விற்கு போகும் வாய்ப்புக் கடைத்தது. பொதுவாக இங்கு நடைபெறும் தமிழ் நிகழ்வுகள், குறித்த நேரத்திற்கு நடப்தில்லை என்ற உணர்வு அதிகம் இருந்தபோதும், மறுநாள் வேலை நாளாக இருப்பதால், அதிசயம் நடக்கலாம் என்று சென்றபோது, அறிந்தவர்கள் இருவர் மட்டும் அங்கு நின்றார்கள். அப்பொழுது நேரம் மாலை 4:20 இருக்கும். (நிகழ்வு தொடங்க இருந்த நேரம் மாலை 4:00 மணி.) அப்பொழுதுதான் நிகழ்ச்சி இயக்குனர் கற்சுறாவும், அவருடன் மெலிஞ்சி முத்தனும் வந்துகொண்டிருந்தார்கள். சுறாவின் தோளில் பொதி ஒன்று இருந்தது, அதன் மூலை திறக்கப்பட்டிருந்தது. அதன் ஊடாக புத்தகங்கள் தெரிந்தன. “தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்” பிரான்ஸில் இருக்கும் யோகரட்ணம் என்பவர் இப்புத்தகத்தை எழுதியுள்ளார்.

நிகழ்விற்கு வருபவர்களின் எண்ணிக்கை நேரம் செல்லச் செல்ல அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. ஒருவாறு ஐந்து மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு இடையில் தேனீர் தயாரிப்பு வேலைகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சிலர் புத்தகங்களை பெற்றுக் கொள்வதற்காக சுறாவிடம் சென்றார்கள். புத்தகத்தின் விலையை விசாரித்தார்கள். செல்வம் அண்ணையை கடிப்பதில் இருக்கிற சந்தோஷம் சுறாவிற்கு நிகர் சுறாதான். “செல்வம் அண்ணையின்ர விலையா சொல்லப்போறன், நீங்கள் கொடுக்கும் எந்த விலைக்கும் நான் சம்மதம்” என்று சொன்னார்.

கதிரைகளை வட்டமாக போட்டு வந்தவர்கள் இருந்தார்கள். பரவாயில்லை கணிசமானவர்கள் வந்திருந்தார்கள். கற்சுறா நிகழ்வைத் தொடக்கி வைத்தார், கொழும்பில் இருந்து வெளிவரும் வீரகேசரிப் பத்திரிகையில், வெளிவந்த விளம்பரத்தை எல்லோருக்கும் வாசித்துக்காட்டி, யாருக்கும் ஏன் கோபம் வரவில்லை? என்று கேள்வி கேட்டார். “சைவ வேளாளர் சமூக நல சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் கொழும்பில் நடைபெற உள்ளதாகவும், தமது சமூகத்தின் நன்மைக்காவும், அவர்களுடைய சந்ததியினருக்காகவும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாகவும்….. ….. என அந்த அறிவித்தலில் இருந்ததை வாசித்தார்.

தாயகம் ஜோர்ச் வழமைபோல கிண்டலும், நகைச்சுவையுடனும் மனித இனங்களின் உறவுகளுக்கிடையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளையும், தனது வாழ்பணுபவங்களையும், மனித நேயத்தைப் பற்றியும் கூறிக்கொண்டிருந்தார். கதிரைகளின் வட்டம் இன்னும் அகலத் தொடங்கியது.

பொதுவாக இம்மாதிரியான கூட்டங்களுக்கு போகின்றவர்கள் சில விதிமுறைகளை வைத்திருக்கிறார்கள். அதாகப்பட்டது,  யார் நடத்துகிறார்கள்? யாரெல்லாம் பேசுகிறார்கள்? என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டுதான் நிகழ்விற்கு போவதா? இல்லையா? என்ற முடிவை எடுப்பது வழக்கம் என்று நண்பர்கள் பேசிக்கொள்வதை கேட்டிருக்கிறேன். இன்றைய நிகழ்வில் அனேகமாக பல்வேறு தரப்பினரும் வந்திருந்தமைக்கு ஒரு காரணமும் உண்டு. நிகழ்வு நடக்கும் இடத்தையும், நேரத்தையும்தான் விளம்பரப்படுத்தியிருந்தார் கற்சுறா. யார் தலைமை தாங்குகிறார்கள்? யார் யாரெல்லாம் பேசுகிறார்கள் என்ற விபரம் தொடர்பாக மூச்சு விடவில்லை. ஒருவேளை விதிமுறையின் விளையாட்டை தெரிந்து கொண்டுதான் ஏற்பாட்டாளர் நடந்து கொண்டாரோ என்று எனக்குத் தோன்றுகிறது.

அடுத்து மனோரஞ்சன் அவர்கள் புத்தகம் தொடர்பாக தன்னை பேச அழைத்த கற்சுறாவிற்கு நன்றி தெரிவித்து பேச ஆரம்பித்தார். மனோரஞ்சன் சிறந்த பேச்சாளர், அவர் பேசும்போது ஆவலோடு கேட்பார்கள். அவர் பேசும்போது சிறு சிறு சம்பவங்களையும் கூறிச்செல்வது வழக்கம். அதனால் என்னவோ பலருக்கும் அவரின் பேச்சுப்பிடிக்கும். கடந்த “பன்முகவெளி“ நிகழ்விலும் மனோரஞ்சன் பேசியிருந்தார். அவருடைய பேச்சு துரோகிகள் பற்றி இருந்தது. யேசுநாதரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான துரோகிகள் வரை. பட்டியலிட்டிருந்தார். தமிழ் சமூகத்திற்கும், துரோகிகள் கலாசாரத்திற்கும் உள்ள உறவை தனது பார்வையில்  ஆய்வுக்குட்படுத்தி பலரின் கவனத்திற்கு உட்பட்டிருந்தார்.

அதேபோல் “தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்“ என்ற புத்தகத்தில் பல பகுதிகளை வாசித்துக் காட்டி மிகத்தெளிவாக பேசினார். இவருடைய பேச்சில் இருந்து புத்தகத்தின் ஆசிரியர் “ஸ்ரீலங்கா சுதந்திக்கட்சியின் மிக நெருக்கமான ஆதரவாளர் என்பதை அறியமுடிந்தது.
மனோரஞ்சன் தனது அரசியல் சார்ந்தே இப்புத்தகத்தின் உள்ளடக்கங்களை விபரிக்கத் தொடங்கினார் என்பதே எனது கருத்து. அவரும் “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி” யின் ஆதரவாளராக இருந்தமை அவருக்கு இன்னும் வசதியாக அமைந்திருந்தது. யாழ்ப்பாணத்துச் சாதி அமைப்பையும், தமிழ் தேசியத்தையும் சாடும்போது, மனோரஞ்சன் “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களுக்கு வழங்கிய சலுகைகளை அழுத்தி, அழுத்தி சொல்லும் முறைக்குப் பின்னால் இருக்கும் “அரசியல்” லை புரிந்து கொள்ள முடிகிறது. சாதி முறைமைகள் தோன்றுவதற்கு மூலகாரணமான இந்து மதத்தைப் பற்றியோ, அல்லது அது சார்ந்த வேறு காரணிகளைப் பற்றியோ விபரிக்க விரும்பாதவர், தமிழ் தேசியம், புலி அரசியல் போன்றவற்றின் ஊடாக சாதியத்தையும் பார்க்கும் போக்கானது, புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் புத்தகத்தை, புலிகளின் முக்கிய உறுப்பினர் பாலகுமாரன் எடுத்துப்பேசுவது போன்றே உணரக்கூடியதாக இருந்தது. தமிழ் தேசியவாதத்திற்கு முன்பே தமிழர்கள் மத்தியில் சாதியம் இருந்ததை மனோரஞ்சன் அறியாதவர் இல்லை. புலிகளின் ஜனநாயக விரோதப்போக்கை தீவிரமாக எதிர்த்தவர்கள், தங்கள் பார்வைகளை அரசியலின்பால் குறுக்கிக்கொள்ளக் கூடாது என்பதே எதிர்பார்ப்பு.

மேலும் மெலிஞ்சி முத்தன், தர்ஷன் போன்றோர் தமது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். இன்னும் பலர் தமது கருத்து மோதல்களை சிறப்பாக செய்திருந்தனர். சில நண்பர்களின் கருத்துப்படி விடையத்தை விட்டு வெளியிலேயே அதிகமான கருத்து மோதல்கள் இடம்பெற்றதாக குற்றம் சாட்டினர்.
இறுதியாக, இலங்கையின் வடபகுதியில் நிலவி வந்த சாதிப்பாகுபாடுகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக போராடியவர்கள்,  குரல்கொடுத்தவர்ள், உதவி ஒத்தாசை வழங்கியவர்கள் போன்ற பல விடையங்களையும், ஆசிரியரின் அனுபவங்களையும் இப்புத்தகம் தாங்கி வந்திருப்பதாகவே தெரிகிறது. புத்தகத்தின் பின் அட்டைப் பகுதியில் இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியைச் சேர்ந்த தேவதாசன் எழுதியுள்ள குறிப்பில் இருந்தும், இக்கூட்டத்தில் கலந்துரையாடியவர்களின் கருத்துகளில் இருந்தும்  இப்புத்தகத்தின் அவசியத்தையும், தேவையையும் உணரமுடிகிறது. இனி புத்தகத்தை வாசித்துவிட்டு மறுபதிவில்……..

Monday, March 05, 2012

சயந்தனின் “ஆறாவடு” எனது பார்வை

சயந்தனின் “ஆறாவடு” நாவல் விமர்சனக் கூட்டம் இன்று நடைபெற்றது. முரளியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு மண்டபம் நிறைந்த மக்கள் வருகை தந்திருந்தார்கள். (மண்டபம் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பெரிய மண்டபம் இல்லை.) என்.மகாலிங்கம் தலமைதாங்கி இருந்தார். மயூ மனோ, ராபேஃல் மற்றும் இப் புத்தகம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இருக்கும் நிலாந்தனின் கட்டுரையை முரளி வாசித்திருந்தார்.

87இல் தொடங்கி 2003 வரையான காலப் பகுதிகளுக்கிடையே இந்நாவலின் கதை நகர்ந்து செல்லிறது. விமர்சனம் செய்தவர்களும், பின்னர் கருத்துகள் வழங்கியவர்களும் இந்நாவல் தொடர்பாக தமது பல்வேறு பட்ட அபிப்பிராங்களை வழங்கியிருந்தார்கள். இந்நிகழ்விற்கு வந்தவர்களில் கணிசமானவர்கள் இந்நாவலை ஏற்கனவே வாசித்திருந்தது இந்நிகழ்விற்கு இன்னும் வசதியாக இருந்தது.

இலங்கையில் இந்திய இராணுவத்தின் வருகையும், அவர்களுக்கும் புலிகளுக்குமிடையிலான சண்டை, இந்திய இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்கிய தமிழ் குழுக்கள், அவர்களுக்கிடையில் அகப்பட்டிருக்கும் தமிழ் மக்கள், அவர்களின் வாழ்வு, துயர், இடப்பெயர்வு, புலிகளின் இராணுவ, அரசியல் நகர்வுகள், காதல், வெளிநாட்டுப் பயணம் என்று நகர்ந்து செல்லும் நாவல், அண்மையில் வெளிவந்திருக்கும் மிகவும் முக்கியமான படைப்பு.

இக்கூட்டத்தில் விமர்சனம் செய்த ராபேஃல்லின், இந்நாவல் குறித்த கருத்துக்களுடன் நானும் ஒத்துப்போகிறேன். நான் நாவல்களை அதிகம் வாசித்து சிலாகிப்பவன் அல்ல. ஆனால் இந்நாவல் நான் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த சம்வங்களையும், இச்சம்பவங்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் என்னையும், என்போன்றவர்களையும் பாதித்திருந்ததனால் இந்நாவலை வாசிக்கத் துாண்டியது. அந்த வகையில் அக்காலப் பகுதியில் பல்வேறு பிரதேசங்களில் நடைபெற்ற பல சம்பவங்களை ஒரு திரட்டாக தந்திருக்கும் ஆசிரியரின் ஆளுமையை பாராட்டாமல் இருக்க முடியாது. அதே நேரம் இந்நாவலில் வரும் சம்பவங்கள் என்னை மிக ஆழமான உணர்விற்கு இட்டுச்செல்ல வில்லை என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்து.

இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த காலங்களில் எனது கிராமத்தில் இருந்த போது மாலை ஆறு மணி இருட்டிக் கொண்டு வரும்போது ஒரு விதமாக நெஞ்சு பட படக்கத் தொடங்கி விடும். எதிர்பாரா நேரமெல்லாம் பெருமூ்ச்சு தன்பாட்டில் வந்துபோகும். நாய்களின் ஓலம் வயிற்றைக் குமையும். இப்படியே இந்த உணர்வு அதிகரித்துச் செல்லும். நடுச்சாமத்தில், சிறுநீர் கழிக்க வீட்டுக்கு வெளியில் போகப் பயம். இந்திய சிப்பாய்களும், அவர்களுடன் சேர்ந்து இயங்கும் தமிழ் குழுக்களும் வேலி ஓரத்தில் படுத்திருப்பது போன்று தோன்றும், இதனால் யன்னல் வழியாக சிறு நீர் கழிக்க வேண்டி வரும். அந்த நேரம் பூவரசம் சருகுகளின் மேல் சிறுநீர் விழவும் அது எழுப்பும் சத்தத்தினால் சடுதியாக சிறுநீரை நிறுத்தும் போது ஏற்படும் வலி சொல்லி மாளாது.

இதே போன்று இந்திய இராணுவம் தங்கி இருந்த கட்டிடம் அவர்கள் அவ் இடத்தை விட்டுச் சென்று ஆறு மாதங்கள் ஆகியும் அவர்களோடு இருந்த ஒருவித எண்ணை மணம் அந்த இடத்தை விட்டு அகலாமல் இருப்பதும், அந்த மணத்தை சுவாசிக்கும் போதெல்லாம் அவர்கள் பற்றிய எண்ண ஓட்டங்களும் ஒருவித அச்ச உணர்வும் ஏற்படுவதை இந்நாவல் மூலமாக இதுபோன்ற சம்பவங்களை வாசிக்கும் போது ஏற்படவில்லை என்பதே எனது கருத்து. இப்படி இருக்க வேண்டுமா? அல்லது இருக்கக் கூடாதா என்ற வாதங்களுக்கு அப்பால் எனது உணர்வினையே இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

அதே போல் இந்நாவலில் வரும் குண்டு பாப்பா சம்பவமும் அதீத கற்பனையாகவே எனக்குப் படுகிறது. இந்திய இராணுவத்தின் கொடுமை தாங்க முடியாதவை, ஆனால் சாதாரண பின்னணி கொண்ட பெண் அந்தச் சூழலில் வீர வசனம் பேசி குண்டை வெடிக்க வைப்பது யதார்த்தம் அற்றதாகவே என்னால் பார்க்க முடிகிறது. இப்படி இந்நாவல் பற்றி பல விடையங்களை பேசிக்கொண்டே போகலாம். எது எவ்வாறாகிலும் இந்நாவலின் முக்கியத்துவம் தவிர்க் முடியாதவையே.

Sunday, February 05, 2012

சுய விமர்சனம் தேவை!


இலங்கையில் சமாதான முயற்ச்சி, நோர்வேயின் பங்கும், கருத்துப் பகிர்வும் உரையாடலும் என்ற நிகழ்வு அண்மையில் ரொரன்டோவில் நடைபெற்றது. இதை “தேடகம்” ஒழுங்குசெய்திருந்தனர்.

இதில் கலந்துகொண்டவர்கள் பலரும் தமது கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் தெரிவித்து கலந்துரையாடினார்கள். இந்தக் கலந்துரையாடல் குறிப்பிட்ட தலைப்பின் ஊடாக உரையாடப்பட்டிருந்தாலும், அதனுடன் தொடர்புடையதும், தொடர்பற்றதுமான பல விடயங்களும் பேசப்பட்டன என்பது உண்மை. முடிந்தளவிற்கு குறுகீடுகள் குறைவாக இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதில் பேசியவர்களில் அனேகமானவர்கள், நோர்வே தொடக்கம், மேற்குலக நாடுகள், இந்தியா, இலங்கை போன்ற நாடுகள் நேர்மையற்ற முறையிலேயே இலங்கை இனப்பிரச்சினையை கையாண்டார்கள் என்றும் அதிலும் நோர்வை கூட இந்த பிரச்சினையை மிகவும் உள்நோக்கத்துடன் நடந்துகொண்டது என்றும் பேசினார்கள். அத்தோடு தமிழர் பிரச்சினையில் புலிகளும் இதேபோன்ற அணுகுமுறையுடனேயே நடந்துகொண்டார்கள் என்பதையும் சிலர் குறிப்பிட்டிருந்தார்கள். இந்த உரையாடல்களை முழுவதுமாக பார்த்துக்கொண்டிருந்தபோது எனக்குத் தோன்றியது, இலங்கை இனப்பிரச்சினையில் நாம் எல்லோரும் தெளிவாகவும், சரியாகவும் இருப்பதாகவும், நேர்வே தொடக்கம், இந்தியா, ஏனைய ஐரோப்பிய நாடுகள் எல்லாம் எமது பிரச்சினையில் வஞ்சகத்தனமாகவும், அரசியல் உள்நோக்கத்துடனும் நடந்து கொண்டது, நடந்துகொள்கிறது. என்ற அபிப்பிராயத்திலேயே பலரின் பேச்சுக்கள் இருந்தன. அது உண்மையும் கூட. ஆனால் இந்த யுத்த நிறுத்த காலத்திலும், சமாதான பேச்சுவார்த்தை காலத்திலும், தமிழர் தரப்பினரும் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பதும் இங்கு விரிவாக ஆராயப்படவில்லை. ஒருவேளை “நோர்வேயின் சமாதான முயற்சியும் தமிழரும்” என்று தலைப்பிடப்பட்டிருந்தால் அது சாத்தியமாக இருந்திருக்குமோ என்னவோ?

இன்றைய சூழலில் நமது அரசியல், சமூக சிந்தனையில் சுயவிமர்சனம் செய்யப்படவேண்டும் என்று சொல்லுபவர்களின் கருத்துடனேயே நானும் ஒத்துப்போகிறேன். எமது இன்றைய பார்வையின் மீதே நாம் விமர்சனம் செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். காரணம் நாம் தொடர்ச்சியாக மற்றவர்கள் மீது குற்றம் சுமத்திப் பழக்கப்பட்டவர்களாக இருந்ததனாலும், எம்மீதான விமர்சனப்பார்வை எம்மிடம் இல்லாததினாலும் தான் நாமும், நமது சமூகமும் இன்றுள்ள நிலையில் இருக்கிறோம் என்பதும் எனது கருத்து.
“தேடகம்” இவ்வாறான கலந்துரையாடல்களை தொடர்ச்சியாக கனடாவில் செய்துவருவது அரோக்கியமான விடயமே! பல்வேறு மாற்றுக் கருத்துக்கொண்டர்வர்களை ஒரே இடத்தில் உரையாடும் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதில் தேடகத்தின் தேவை, தேவையே. உதாரணமாக நாடு கடந்த அரசாங்கத்தின் சபாநாயகர் பொன் பால்ராஜ் போன்றவர்களோடு கருத்துக்கள் பரிமாறப்படும்போது குறிப்பிட்ட கருத்துக்கள் இன்னொரு சூழலுக்கு கடத்தப்படுகின்றதையும், அல்லது அவர் போன்றவர்கள் மாற்றுக்கருத்துக் கொண்டவர்களின் சூழலுக்குள் வந்து உரையாடல்கள் நிகழ்த்தப்படுவது நல்ல சமிஞ்ஞையாகவே எனக்குப் படுகிறது.

அதே நேரம் அண்மையில் “யாரிந்தப் புத்தி ஜீவிகள்?” என்ற அறிக்கையை தாயாரித்து வெளியிட்டவர்களில் தேடக அமைப்பினரும் அடங்குவர். இந்த அறிக்கை தொடர்பாக தேடகத்தின் பங்கை விமர்சித்து அல்லது கேள்வி எழுப்பி முகப்புத்தகத்தில் பலரும் கருத்துச் சொல்லியிருந்தார்கள். அதன் பயனானக இன்று நடந்து முடிந்த கலந்துரையாடலுடன், “யாரிந்தப் புத்தி ஜீவிகள்? என்ற அறிகை தொடர்பாகவும் உரையாடுவதாகவும் தேடகம் தனது முகப்புத்தகத்தில் அறிவித்திருந்தது. ஆனால் அது தொடர்பாக தேடகம் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது ஏமாற்றமே. இருந்தபோதும் நோர்வே தொடர்பான கலந்துரையாடல் முடிந்தபின்னர் ஆங்காங்கே சிலர் தேடகத்தின் அறிக்கை தொடர்பாக கதைத்தபோது, தேடகம் சார்பில் கதைத்தவர்கள், கீழ்கண்டவாறு தெரிவித்திருந்தார்கள்
முஸ்லீம் மக்களை புலிகள் வெளியேற்றியபோது இந்த 71 புத்திஜீவிகளும் எங்கு போய்யிருந்தார்கள் என்றும், அதற்காக இந்த 71 பேரும் முதலில் முஸ்லீம் மக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்ற தொனியில் கருத்து தெரிவித்திருந்தார்கள். அத்தோடு 71 பெயர்களில் சில பெயர்களை குறிப்பிட்டு, குறிப்பாக பத்திரிகையாளர் டி.பி.எஸ். ஜெயராஜ், முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டபோது அதற்கு ஆதரவாக கருத்து வெளியிட்டார் என்றும், முஸ்லீம் மக்கள் புலிகளால் துரத்தப்பட்டதை, அன்றில் இருந்து இன்று வரை எதிர்ப்பதில் எந்த மாற்றுக்கருத்தும் எமக்கில்லை என்பதை தேடக நண்பர்கள் கூறியதை கேட்கக்கூடியதாக இருந்தது.

ஆனால் என்னைப்பொறுத்தவரை முதலில் இந்த அறிக்கை தொடர்பாக தேடகம் கலந்துரையாடலை ஏற்படுத்தாததும், அல்லது ஏற்படுத்த முடியாதமைக்கான காரணத்தை தெரிவிக்காமையும் ஏமாற்றமே. அத்தோடு அந்த அறிக்கையில் கையெழுத்திட்ட ஒருசிலர் மேல் தேடகத்திற்கு இருக்கும் விமர்சனத்திற்காக அந்த அறிக்கையை புறக்கணித்தது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயமாக கருதமுடியாது. அதில் கையெழுத்திட்ட தனிநபர்களுக்கப்பால் இன்றைய சூழலில் அந்த அறிக்கையில் சொல்லப்படும் விடயமே கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பதே பிரதானமாக இருக்கவேண்டும் என்பது எனது கருத்து.
தேடகம் போன்ற அமைப்பு பன்முகத்தன்மையை விரிவு படுத்தும் நோக்கில் செயற்படுகிறது என்ற கருத்தை அடிக்கடி தனது அறிக்கைகளில் வெளிப்படுத்துகின்ற காரணத்திற்காகவே, அவ்வறிக்கை தொடர்பாக தனது பார்வையை மீள்பார்வை செய்யவேண்டும் என்பதே என்போன்றவர்களின் கருத்தும் கூட. செய்வார்களா?

Sunday, September 10, 2006

பட்டினிச் சாவை நோக்கிக் யாழ் குடாநாடு

இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த மாதம் 11ம் திகதி வெடித்த மோதல்களை அடுத்து, யாழ்குடாநாட்டிற்கான அத்தியாவசியப் பொருட்களின் விநியோகமும் தடைப்பட்டது. கடந்த ஒரு மாதமாக, அத்தியாவசியப் பொருட்கள் இன்றி அரசபடைகளின் கெடுபிடிகளுக்கும் ஊரடங்கு சட்டத்திற்கும், தொடர்ச்சியான குண்டுவீச்சுகளுக்கும் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஐந்து லட்சம் மக்களின் அவல நிலை தொடர்பாக, சில தொண்டர் நிறுவனங்கள் குரல் கொடுத்தாலும், யுத்த முழக்கங்களுக்கு மத்தியில், இக் குரல்களும் சர்வதேச சமூகத்தின் காதுகளுக்கு எட்டவில்லை. இந்நிலையில் யாழ் ஆயர், அதிவண. தோமஸ் சௌந்தரநாயகம், விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கு ஓர் அவசர கடிதத்தை அனுப்பியுள்ளார்.

இக்கடிதத்தில் “யாழ் அரச அதிபரின் அறிக்கைப்; பிரகாரம், கையிருப்பில் உள்ள உணவுப் பொருட்கள் இன்னும் ஐந்தே நாளில் முடிவடைந்துவிடும், இப்பொழுது கொழும்பு துறைமுகத்தில் யாழ் மக்களுக்கென உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டிருக்கும் கப்பல், இன்னும் ஓரிரு நாட்களில் புறப்படாவிட்டால், யாழ் மக்கள் பட்டினிச்சாவை சந்திக்க நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 11ம் திகதியில் இருந்து பெரும் துன்பத்தை அனுபவித்துவரும் மக்களை பட்டினிச்சாவை எதிர் நோக்க வைப்பது கொடூரமானது. எனவே குடாநாட்டில் பட்டினிச்சாவைத் தவிர்ப்பதற்காக ஓரிரு கப்பல்களையாவது தடையின்றி யாழ் வந்தடைய அனுமதிக்கும்படி விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தை மனிதாபிமானரீதியில் அன்பாக வேண்டுகின்றேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயரின் கடிதத்திற்கு விடுதலைப் புலிகள் பதிலெதுவும் அளிக்கவில்லை. என்றாலும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் தொடர்பாக தமது நிலைப்பாட்டை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அனுப்பி வைத்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர். ஆகாய மற்றும் கடல்வழிப்பாதைகளின் பாதுகாப்புக்குத் தாம் உத்தரவாதம் அளிக்க முடியாது எனவும், வன்னி மற்றும் யாழ் குடா நாட்டு மக்களுக்குத் தேவையான பொருட்களைக் கொண்டு செல்வதற்குத் தரைவழிப் பாதையைத் திறந்துவிடத் தயாராக உள்ளார்கள் எனத் தெரிவித்துள்ளார்கள்.

அதாவது. இலங்கை அரசு கப்பல்கள் மூலம் கடல்வழிப்பாதையால் மட்டுமே பொருட்களை அனுப்ப முடியும் என்கின்றது. விடுதலைப் புலிகளோ தரைவழிப் பாதையை மட்டுமே அனுமதிப்போம் என்கின்றனர். ஆக மக்களின் அடிப்படை மனிதாபிமானப் பிரச்சினை கூட இன்று இரு தரப்பிற்குமிடையேயான அரசியல், கௌரவப் பிரச்சினையாக மாறியுள்ளது என்பதுதான் மிகவும் வேதனையான விடயம். ஸ்ரீ லங்கா அரசாங்கம், கடல்வழி மூலம்தான் பொருட்களை அனுப்ப முடியும் என விடாப்பிடியாக நிற்பதில், சில இராணுவ நலன்கள் பின்னணியில் உள்ளது என்பதும் சகலரும் அறிந்த விடயம்தான். கடல்வழி மூலம் அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லப்படும் வேளையில் யாழ்குடா நாட்டில் முடங்கிப் போயிருக்கும் தனது துருப்புக்களுக்குத் தேவையான இராணுவத் தளபாடங்களையும், வேறு பொருட்களையும் அனுப்ப முடியும். இவ் இராணுவக் காரணியைக் கருத்தில் கொண்டே விடுதலைப்புலிகளும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள்.

மொத்தத்தில் இரு தரப்பினரதும் இராணுவக் கண்ணோட்டங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகின்றதே அல்லாமல், பட்டினிச்சாவை எதிர்நோக்கும் தமிழ் மக்களின் அடிப்படை தேவைகளுக்கு அல்ல என்பது இங்கு தெளிவாகின்றது. 1980 களில் இதே போன்று இலங்கை அரசாங்கத்தினால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருந்த குடா நாட்டு மக்களுக்கு இந்திய இராணுவ விமானங்கள் உணவுப் பொட்டலங்களைப் போட்டதுபோல், இன்று செய்வதற்கு இந்தியாவும் தயாராக இல்லை.

இலங்கை அரசைப் பொறுத்தவரையில், வடகிழக்கு தமிழ்மக்களை தன்னுடைய நாட்டுப் பிரஜையாக என்றுமே கருதியதில்லை. தன்னுடைய இராணுவத்தின் நலன்கள் தமிழ் மக்களின் மனிதாபிமான நலன்களைவிட முதன்மையானது, முக்கியமானது. ஆகவே இலங்கை அரசிடம் இருந்து தமிழ்மக்களை நோக்கிய மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியாது. ஆனால் விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரையில் அப்படி இருக்கமுடியாது. தமிழ்மக்களின் விடுதலைக்கும் மேம்பாட்டுக்கும் நீண்டகாலமாகப் போராடும் அமைப்பு என்ற ரீதியில் மக்களின் அடிப்படைத் தேவைகள் இராணுவ நலன்களை விட முக்கியமானது, முதன்மையானது. ஆகவேதான் யாழ் ஆயரின் வேண்டுகோளை ஏற்று கடல்வழிப்பாதையை கப்பல் போக்குவரத்துக்கு அனுமதிப்பது தவறாகாது. இதனால் இலங்கை அரசாங்கத்திடம் சரண்அடைந்து விட்டதாக யாராவது கூறுவார்களே எனக் கவலைப்படத் தேவையில்லை.

ஏனெனில் தமிழ் மக்களின் துயரங்களை நாமேதான் துடைக்கவேண்டும் வேறுயாரும் நமக்காக இதைச் செய்யப்போவதில்லை.

நன்றி: 'வகைறை'(08.09.2006)

Saturday, August 19, 2006

யாழில் ஒரு வாரக் காலமாக நடைபெற்ற சண்டையில் 88 புலிகள் பலி

யாழ் குடாப் பகுதியில் ஒரு வாரத்துக்கு மேலாக நடந்து வரும் மோதல்கள் காரணமாக 88 விடுதலைப் புலிகள் மரணமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையின் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை இராணுவத் தரப்பில் 485 பேர் வரையில் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இலங்கை விமானப் படையால் நடத்தப்பட்ட தாக்குதலில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக படகு கட்டும் துறைதான் பாதிக்கப்பட்டது என்றும் இலங்கை இராணுவத்தினர் கூறுவது போல புலிகளின் படகுகள் தாக்குதலுக்குள்ளாகவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

யாழ்குடாப் பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்வது குறித்து செஞ்சிலுவை சங்கம் வைத்துள்ள திட்டத்தை தாங்கள் பரிசீலித்து வருவதாகவும் இளந்திரையன் தெரிவித்தார்.

துப்பாக்கிகளிடம் தோற்றுப் போனவர்கள்...துப்பாக்கிகளிடம் காதல் செய்பவர்கள்...

கேதீஸ்வரன் லோகநாதன் சென்ற சனிக்கிழமை (12.08.2006) இரவு 9:30 மணியளவில் அவரின் வீட்டில் வைத்து துப்பாக்கி நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இலங்கையில் இவ்வாறான கொலைகள் இன்று நேற்றல்ல, பல காலமாக மிக சர்வசாதாரணமாக நிகழ்கின்றது. இக்கொலைகளை யார் செய்கின்றார்கள் என்பதை விட எவ்வாறானவர்கள் கொல்லப்படுகின்றார்கள் என்பதும் தெளிவாகத் தெரியும். கொலை செய்வதன் மூலம் தங்கள் அரசியல் இலக்கை இலகுவில் அடைந்து விடலாம் என்று இன்னும் அவர்கள் நம்பிக்கிக்கொண்டிருப்பது தான் வேடிக்கையாக இருக்கின்றது.

கேதீஸ் ஒரு துப்பாக்கிதாரி இல்லை. மெலிந்த உருவமும், உடல் ரீதியாக பலம் குறைந்தவருமானவருக்கு துப்பாக்கி குண்டினால் ஆன சாவை எண்ணும் போது கொலைகாரர்களின் கோழைத்தனம் வெட்டவெளிச்சமாகிறது.

கேதீஸ் ஒரு புத்திஜீவி, அறிவாளி, தமிழர் பிரச்சினையில் அக்கறை கொண்ட மனிதன். இப்படி எத்தனையோ தமிழர்களை நாம் இழந்திருக்கின்றோம். இவ்வாறு கொல்லப்பட்ட பெரும்பாலான தமிழர்கள் யாரையும் சுட்டதில்லை, அல்லது குறைந்த பட்சம் அவர்களிடம் துப்பாகியும் இருந்ததில்லை. ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரச்சினையை ஒரு மனிதனின் ஆளுகைக்குள் கையகப்படுத்துவது வியப்பான ஒன்று. இதைத்தான் புலிகள் செய்கின்றார்கள். தனியொருவனின் கொள்கைக்கும், சிந்தனைக்கும் மாற்றாக இருப்பவனை கொலைசெய்யத்துணியும் கலாசாரம் எவ்வளது ஆபத்தான சமூத்தை உருவாக்கிவிடும் என்பதை இக் கொலைஞர்கள் அறியமாட்டார்களா?
இன்றைய தமிழ் சூழலில் துரோகிகள் பட்டம் மிகவும் அலசப்படவேண்டிய ஒரு விடையம். தனியொருவனின் சிந்தனைக்கு மாற்றாக இருக்கும் எவனும் துரோகியாக கணிக்கப்படுவது நமது தமிழ் சமூகத்தில் தான் காணப்படுகின்றது. அதுவும் இன்று உலகம் அறிவியலிலும், ஆராய்ச்சியிலும் முன்னேறிக்கொண்டிருக்கும் தற்போதைய சூழலில் தமிழனின் சுருங்கிய சி;ந்தனை அவனை கீழ் நிலைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்துள்ளது.
இலங்கை தமிழ் சூழலிலே துரோகிகள் பட்டியலில் இருந்து கொல்லப்பட்டவர்களும், கொல்லப்பட இருப்பவர்களுக்கும், தமிழர் பிரச்சினையில் மிக நெருங்கிய தொடர்புகொண்டவர்கள். தமிழ் இனப்பிரச்சினையை கையில் எடுத்ததால் தமது சௌகரியங்களை கைநழுவ விட்டவர்கள். பல இன்னல்களையும், நெருக்கடிகளையும் தமதாக்கிக் கொண்டவர்கள். ஈழத்தமிழர் போராட்டத்தில் பல்வேறு பிரிவுகள், முரண்பாடுகள், தவறுகள் என்று பலவிதமான சிக்கல்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன, ஆனால் அவற்றைத் தீர்ப்பதற்கு துப்பாக்கி ரவைகள் அல்ல மூலப்பொருள்.

நூற்றுக்கணக்கான தமிழ் புத்திஜீவகளை தீர்த்துக்கட்டிய கொலையாளிகள் இன்று தமது இலக்கை அடைந்து விட்டார்களா என்றால் அதுவும் இல்லை. மாறாக அறிவுசார் தமிழ் இனம் அழிக்கப்பட்டதே மிச்சம். இருப்பவர்களும் துதிபாடிகளாகவே இருக்கின்றார்கள். பெரும்பான்மைத் தமிழர்கள் ‘மாடுமாதிரி வளந்தேன் சாமி, வணக்கம் ஒன்றும் தெரியா சாமி’ என்ற மந்தைகளாகவே இருக்கின்றார்கள். இன்னும் சில அல்லது சொற்ப மாற்றுக் கருத்தாளர்களும் குரல்வளை நசுக்கப்பட்டு ஈனக்குரலில் வலம் வருகின்றார்கள்.

ஐயோ தமிழினமே ஆண்டவன் வந்தாலும் உன்னைக் காப்பாற்ற முடியாது, துப்பாக்கிகள் மேல் காதல்; கொண்ட தமிழர்களிடம் இருந்து!