சென்ற ஞாயிற்றுக்
கிழமை (22.04.12) “நுால் அறிமுகமும் வரலாற்றைப் பேசுதல்“ என்னும் நிகழ்விற்கு போகும்
வாய்ப்புக் கடைத்தது. பொதுவாக இங்கு நடைபெறும் தமிழ் நிகழ்வுகள், குறித்த நேரத்திற்கு
நடப்தில்லை என்ற உணர்வு அதிகம் இருந்தபோதும், மறுநாள் வேலை நாளாக இருப்பதால், அதிசயம்
நடக்கலாம் என்று சென்றபோது, அறிந்தவர்கள் இருவர் மட்டும் அங்கு நின்றார்கள். அப்பொழுது
நேரம் மாலை 4:20 இருக்கும். (நிகழ்வு தொடங்க இருந்த நேரம் மாலை 4:00 மணி.) அப்பொழுதுதான்
நிகழ்ச்சி இயக்குனர் கற்சுறாவும், அவருடன் மெலிஞ்சி முத்தனும் வந்துகொண்டிருந்தார்கள்.
சுறாவின் தோளில் பொதி ஒன்று இருந்தது, அதன் மூலை திறக்கப்பட்டிருந்தது. அதன் ஊடாக புத்தகங்கள்
தெரிந்தன. “தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்” பிரான்ஸில் இருக்கும் யோகரட்ணம்
என்பவர் இப்புத்தகத்தை எழுதியுள்ளார்.
நிகழ்விற்கு வருபவர்களின்
எண்ணிக்கை நேரம் செல்லச் செல்ல அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. ஒருவாறு ஐந்து மணிக்கு
தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு இடையில் தேனீர் தயாரிப்பு வேலைகளும் நடைபெற்றுக்
கொண்டிருந்தது. சிலர் புத்தகங்களை பெற்றுக் கொள்வதற்காக சுறாவிடம் சென்றார்கள். புத்தகத்தின்
விலையை விசாரித்தார்கள். செல்வம் அண்ணையை கடிப்பதில் இருக்கிற சந்தோஷம் சுறாவிற்கு
நிகர் சுறாதான். “செல்வம் அண்ணையின்ர விலையா சொல்லப்போறன், நீங்கள் கொடுக்கும் எந்த
விலைக்கும் நான் சம்மதம்” என்று சொன்னார்.
கதிரைகளை வட்டமாக
போட்டு வந்தவர்கள் இருந்தார்கள். பரவாயில்லை கணிசமானவர்கள் வந்திருந்தார்கள். கற்சுறா
நிகழ்வைத் தொடக்கி வைத்தார், கொழும்பில் இருந்து வெளிவரும் வீரகேசரிப் பத்திரிகையில்,
வெளிவந்த விளம்பரத்தை எல்லோருக்கும் வாசித்துக்காட்டி, யாருக்கும் ஏன் கோபம் வரவில்லை?
என்று கேள்வி கேட்டார். “சைவ வேளாளர் சமூக நல சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம்
கொழும்பில் நடைபெற உள்ளதாகவும், தமது சமூகத்தின் நன்மைக்காவும், அவர்களுடைய சந்ததியினருக்காகவும்
ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாகவும்….. ….. என அந்த அறிவித்தலில் இருந்ததை
வாசித்தார்.
தாயகம் ஜோர்ச்
வழமைபோல கிண்டலும், நகைச்சுவையுடனும் மனித இனங்களின் உறவுகளுக்கிடையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளையும்,
தனது வாழ்பணுபவங்களையும், மனித நேயத்தைப் பற்றியும் கூறிக்கொண்டிருந்தார். கதிரைகளின்
வட்டம் இன்னும் அகலத் தொடங்கியது.
பொதுவாக இம்மாதிரியான
கூட்டங்களுக்கு போகின்றவர்கள் சில விதிமுறைகளை வைத்திருக்கிறார்கள். அதாகப்பட்டது, யார் நடத்துகிறார்கள்? யாரெல்லாம் பேசுகிறார்கள்?
என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டுதான் நிகழ்விற்கு போவதா? இல்லையா? என்ற முடிவை
எடுப்பது வழக்கம் என்று நண்பர்கள் பேசிக்கொள்வதை கேட்டிருக்கிறேன். இன்றைய நிகழ்வில்
அனேகமாக பல்வேறு தரப்பினரும் வந்திருந்தமைக்கு ஒரு காரணமும் உண்டு. நிகழ்வு நடக்கும்
இடத்தையும், நேரத்தையும்தான் விளம்பரப்படுத்தியிருந்தார் கற்சுறா. யார் தலைமை தாங்குகிறார்கள்?
யார் யாரெல்லாம் பேசுகிறார்கள் என்ற விபரம் தொடர்பாக மூச்சு விடவில்லை. ஒருவேளை விதிமுறையின்
விளையாட்டை தெரிந்து கொண்டுதான் ஏற்பாட்டாளர் நடந்து கொண்டாரோ என்று எனக்குத் தோன்றுகிறது.
அடுத்து மனோரஞ்சன்
அவர்கள் புத்தகம் தொடர்பாக தன்னை பேச அழைத்த கற்சுறாவிற்கு நன்றி தெரிவித்து பேச ஆரம்பித்தார்.
மனோரஞ்சன் சிறந்த பேச்சாளர், அவர் பேசும்போது ஆவலோடு கேட்பார்கள். அவர் பேசும்போது
சிறு சிறு சம்பவங்களையும் கூறிச்செல்வது வழக்கம். அதனால் என்னவோ பலருக்கும் அவரின்
பேச்சுப்பிடிக்கும். கடந்த “பன்முகவெளி“ நிகழ்விலும் மனோரஞ்சன் பேசியிருந்தார். அவருடைய
பேச்சு துரோகிகள் பற்றி இருந்தது. யேசுநாதரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் தொடக்கம் முள்ளிவாய்க்கால்
வரையான துரோகிகள் வரை. பட்டியலிட்டிருந்தார். தமிழ் சமூகத்திற்கும், துரோகிகள் கலாசாரத்திற்கும்
உள்ள உறவை தனது பார்வையில் ஆய்வுக்குட்படுத்தி
பலரின் கவனத்திற்கு உட்பட்டிருந்தார்.
அதேபோல் “தீண்டாமைக்
கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்“ என்ற புத்தகத்தில் பல பகுதிகளை வாசித்துக் காட்டி
மிகத்தெளிவாக பேசினார். இவருடைய பேச்சில் இருந்து புத்தகத்தின் ஆசிரியர் “ஸ்ரீலங்கா
சுதந்திக்கட்சியின் மிக நெருக்கமான ஆதரவாளர் என்பதை அறியமுடிந்தது.
மனோரஞ்சன் தனது
அரசியல் சார்ந்தே இப்புத்தகத்தின் உள்ளடக்கங்களை விபரிக்கத் தொடங்கினார் என்பதே எனது
கருத்து. அவரும் “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி” யின் ஆதரவாளராக இருந்தமை அவருக்கு இன்னும்
வசதியாக அமைந்திருந்தது. யாழ்ப்பாணத்துச் சாதி அமைப்பையும், தமிழ் தேசியத்தையும் சாடும்போது,
மனோரஞ்சன் “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களுக்கு வழங்கிய
சலுகைகளை அழுத்தி, அழுத்தி சொல்லும் முறைக்குப் பின்னால் இருக்கும் “அரசியல்” லை புரிந்து
கொள்ள முடிகிறது. சாதி முறைமைகள் தோன்றுவதற்கு மூலகாரணமான இந்து மதத்தைப் பற்றியோ,
அல்லது அது சார்ந்த வேறு காரணிகளைப் பற்றியோ விபரிக்க விரும்பாதவர், தமிழ் தேசியம்,
புலி அரசியல் போன்றவற்றின் ஊடாக சாதியத்தையும் பார்க்கும் போக்கானது, புலிகளின் மதியுரைஞர்
அன்ரன் பாலசிங்கத்தின் புத்தகத்தை, புலிகளின் முக்கிய உறுப்பினர் பாலகுமாரன் எடுத்துப்பேசுவது
போன்றே உணரக்கூடியதாக இருந்தது. தமிழ் தேசியவாதத்திற்கு முன்பே தமிழர்கள் மத்தியில்
சாதியம் இருந்ததை மனோரஞ்சன் அறியாதவர் இல்லை. புலிகளின் ஜனநாயக விரோதப்போக்கை தீவிரமாக
எதிர்த்தவர்கள், தங்கள் பார்வைகளை அரசியலின்பால் குறுக்கிக்கொள்ளக் கூடாது என்பதே எதிர்பார்ப்பு.
மேலும் மெலிஞ்சி
முத்தன், தர்ஷன் போன்றோர் தமது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். இன்னும் பலர் தமது கருத்து
மோதல்களை சிறப்பாக செய்திருந்தனர். சில நண்பர்களின் கருத்துப்படி விடையத்தை விட்டு
வெளியிலேயே அதிகமான கருத்து மோதல்கள் இடம்பெற்றதாக குற்றம் சாட்டினர்.
இறுதியாக, இலங்கையின்
வடபகுதியில் நிலவி வந்த சாதிப்பாகுபாடுகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக போராடியவர்கள்,
குரல்கொடுத்தவர்ள், உதவி ஒத்தாசை வழங்கியவர்கள்
போன்ற பல விடையங்களையும், ஆசிரியரின் அனுபவங்களையும் இப்புத்தகம் தாங்கி வந்திருப்பதாகவே
தெரிகிறது. புத்தகத்தின் பின் அட்டைப் பகுதியில் இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியைச்
சேர்ந்த தேவதாசன் எழுதியுள்ள குறிப்பில் இருந்தும், இக்கூட்டத்தில் கலந்துரையாடியவர்களின்
கருத்துகளில் இருந்தும் இப்புத்தகத்தின் அவசியத்தையும்,
தேவையையும் உணரமுடிகிறது. இனி புத்தகத்தை வாசித்துவிட்டு மறுபதிவில்……..
0 comments:
Post a Comment