இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த மாதம் 11ம் திகதி வெடித்த மோதல்களை அடுத்து, யாழ்குடாநாட்டிற்கான அத்தியாவசியப் பொருட்களின் விநியோகமும் தடைப்பட்டது. கடந்த ஒரு மாதமாக, அத்தியாவசியப் பொருட்கள் இன்றி அரசபடைகளின் கெடுபிடிகளுக்கும் ஊரடங்கு சட்டத்திற்கும், தொடர்ச்சியான குண்டுவீச்சுகளுக்கும் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஐந்து லட்சம் மக்களின் அவல நிலை தொடர்பாக, சில தொண்டர் நிறுவனங்கள் குரல் கொடுத்தாலும், யுத்த முழக்கங்களுக்கு மத்தியில், இக் குரல்களும் சர்வதேச சமூகத்தின் காதுகளுக்கு எட்டவில்லை. இந்நிலையில் யாழ் ஆயர், அதிவண. தோமஸ் சௌந்தரநாயகம், விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கு ஓர் அவசர கடிதத்தை அனுப்பியுள்ளார்.
இக்கடிதத்தில் “யாழ் அரச அதிபரின் அறிக்கைப்; பிரகாரம், கையிருப்பில் உள்ள உணவுப் பொருட்கள் இன்னும் ஐந்தே நாளில் முடிவடைந்துவிடும், இப்பொழுது கொழும்பு துறைமுகத்தில் யாழ் மக்களுக்கென உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டிருக்கும் கப்பல், இன்னும் ஓரிரு நாட்களில் புறப்படாவிட்டால், யாழ் மக்கள் பட்டினிச்சாவை சந்திக்க நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 11ம் திகதியில் இருந்து பெரும் துன்பத்தை அனுபவித்துவரும் மக்களை பட்டினிச்சாவை எதிர் நோக்க வைப்பது கொடூரமானது. எனவே குடாநாட்டில் பட்டினிச்சாவைத் தவிர்ப்பதற்காக ஓரிரு கப்பல்களையாவது தடையின்றி யாழ் வந்தடைய அனுமதிக்கும்படி விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தை மனிதாபிமானரீதியில் அன்பாக வேண்டுகின்றேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயரின் கடிதத்திற்கு விடுதலைப் புலிகள் பதிலெதுவும் அளிக்கவில்லை. என்றாலும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் தொடர்பாக தமது நிலைப்பாட்டை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அனுப்பி வைத்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர். ஆகாய மற்றும் கடல்வழிப்பாதைகளின் பாதுகாப்புக்குத் தாம் உத்தரவாதம் அளிக்க முடியாது எனவும், வன்னி மற்றும் யாழ் குடா நாட்டு மக்களுக்குத் தேவையான பொருட்களைக் கொண்டு செல்வதற்குத் தரைவழிப் பாதையைத் திறந்துவிடத் தயாராக உள்ளார்கள் எனத் தெரிவித்துள்ளார்கள்.
அதாவது. இலங்கை அரசு கப்பல்கள் மூலம் கடல்வழிப்பாதையால் மட்டுமே பொருட்களை அனுப்ப முடியும் என்கின்றது. விடுதலைப் புலிகளோ தரைவழிப் பாதையை மட்டுமே அனுமதிப்போம் என்கின்றனர். ஆக மக்களின் அடிப்படை மனிதாபிமானப் பிரச்சினை கூட இன்று இரு தரப்பிற்குமிடையேயான அரசியல், கௌரவப் பிரச்சினையாக மாறியுள்ளது என்பதுதான் மிகவும் வேதனையான விடயம். ஸ்ரீ லங்கா அரசாங்கம், கடல்வழி மூலம்தான் பொருட்களை அனுப்ப முடியும் என விடாப்பிடியாக நிற்பதில், சில இராணுவ நலன்கள் பின்னணியில் உள்ளது என்பதும் சகலரும் அறிந்த விடயம்தான். கடல்வழி மூலம் அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லப்படும் வேளையில் யாழ்குடா நாட்டில் முடங்கிப் போயிருக்கும் தனது துருப்புக்களுக்குத் தேவையான இராணுவத் தளபாடங்களையும், வேறு பொருட்களையும் அனுப்ப முடியும். இவ் இராணுவக் காரணியைக் கருத்தில் கொண்டே விடுதலைப்புலிகளும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள்.
மொத்தத்தில் இரு தரப்பினரதும் இராணுவக் கண்ணோட்டங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகின்றதே அல்லாமல், பட்டினிச்சாவை எதிர்நோக்கும் தமிழ் மக்களின் அடிப்படை தேவைகளுக்கு அல்ல என்பது இங்கு தெளிவாகின்றது. 1980 களில் இதே போன்று இலங்கை அரசாங்கத்தினால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருந்த குடா நாட்டு மக்களுக்கு இந்திய இராணுவ விமானங்கள் உணவுப் பொட்டலங்களைப் போட்டதுபோல், இன்று செய்வதற்கு இந்தியாவும் தயாராக இல்லை.
இலங்கை அரசைப் பொறுத்தவரையில், வடகிழக்கு தமிழ்மக்களை தன்னுடைய நாட்டுப் பிரஜையாக என்றுமே கருதியதில்லை. தன்னுடைய இராணுவத்தின் நலன்கள் தமிழ் மக்களின் மனிதாபிமான நலன்களைவிட முதன்மையானது, முக்கியமானது. ஆகவே இலங்கை அரசிடம் இருந்து தமிழ்மக்களை நோக்கிய மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியாது. ஆனால் விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரையில் அப்படி இருக்கமுடியாது. தமிழ்மக்களின் விடுதலைக்கும் மேம்பாட்டுக்கும் நீண்டகாலமாகப் போராடும் அமைப்பு என்ற ரீதியில் மக்களின் அடிப்படைத் தேவைகள் இராணுவ நலன்களை விட முக்கியமானது, முதன்மையானது. ஆகவேதான் யாழ் ஆயரின் வேண்டுகோளை ஏற்று கடல்வழிப்பாதையை கப்பல் போக்குவரத்துக்கு அனுமதிப்பது தவறாகாது. இதனால் இலங்கை அரசாங்கத்திடம் சரண்அடைந்து விட்டதாக யாராவது கூறுவார்களே எனக் கவலைப்படத் தேவையில்லை.
ஏனெனில் தமிழ் மக்களின் துயரங்களை நாமேதான் துடைக்கவேண்டும் வேறுயாரும் நமக்காக இதைச் செய்யப்போவதில்லை.
நன்றி: 'வகைறை'(08.09.2006)
0 comments:
Post a Comment